• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

08 Sep 2010

Reading time ~2 minutes

சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல புத்தகங்களை எழுதி இச்சமூகத்துக்கு படைத்தார், அந்த புத்தகங்கள் சிறை மலர்கள் என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்த சிறைமலர்கள் வரிசையில் மூன்றாவது புத்தகம் “மனிதகுலமும் தமிழ்த் தேசியமும்“. இந்தச் சிறை மலரில் இன்னுமொரு முக்கிய புத்தகம் “உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்“. பழநெடுமாறன் அய்யாவினுடைய புத்தகங்களில் மேலோட்டமான எந்தப் பொருளையும் காணமுடியாது, அதேபோல, அவருடைய புத்தகங்கள் தகவல் களஞ்சியங்களாகவே இருக்கும். புத்தகத் தகவல்களோடு பெட்டிச் செய்திகளாக தகவல்களைக் கொட்டித் தருவதில் அவருக்கு நிகர் அவர் தான்.
மனிதகுலமும் தமிழ்த் தேசியமும் என்னும் இந்நூல் அளவில் மிகச் சிறியதாகவும், பத்து அத்தியாயங்களையும் கொண்டிருந்தாலும் எளிமையான ஒரு அறிமுக நூலாகவும் அரிச்சுவடியைப் போலவும் இருப்பது இதன் சிறப்பு. முதல் அத்தியாயம் மனித இனத்தின் தோற்றத்தையும், பல்வேறு வகைப் பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடுகளையும் மிகச் சுருக்கமாக ஒரு கதைச்சொல்லியைப் போலச் சொல்லிச் செல்கிறார். அதே போல அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஏகாதிபத்திய அரசுகளின் தோற்றங்களையும், காலனியாதிக்க நாடுகளின் தோற்றத்தையும், குடியேற்ற நாடுகளின் நிலைப்பாட்டையும் விவரிக்கிறார்.
தேசிய இனங்களின் வரையறையோடு, இன உணர்ச்சியோ, மத உணர்ச்சியோ, மத ஆதிக்கமோ எந்த தேசங்களையும் ஒன்றாக பிணைக்கும் சக்தியாக இல்லாமல், சிதறுண்ட தேசங்களை பட்டியலிடும் அதே நேரத்தில், மொழி மட்டுமே தேசங்களை இணைக்கும் இணைப்புச் சக்தியாக இருப்பதையும், மதத்தைத் தாண்டியும் மொழியால் பிரிந்த தேசங்களையும், மொழியால் இணைந்த தேசங்களையும் பட்டியலிடுகிறார். இணைந்து பிரிந்த நாடுகளையும், பிரிந்து பின் ஒன்றாக இணைந்த நாடுகளையும், கூட்டமைப்புகளையும் பட்டியலிடுகிறார். பட்டியல் எனும் போதே இன்னொன்றையும் சொல்லிவிடுவதே நல்லது. இப்புத்தகத்தில் பின்னிணைப்பாக உலக நாடுகளனைத்திலும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை பட்டியலிடுகிறார்.
மொழிவழித்தேசியம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் பேசும் அதே நேரத்தில் மத வழித் தேசியத்தின் பின்னாலிருக்கும் குறுக்குச்சால் ஓட்டும் புத்தியையும், இந்தியப் பிரிவினையின் பின்னாலிருந்த, தேசியவாதிகளின் குழப்ப மனநிலையையும் பதிவு செய்கிறார். அதேபோல ஒரு பெட்டிச் செய்தியில், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தலைவர்களின் பிரபலமும், மக்கள் சக்தியும் உடைய தலைவர்கள் இன்று யாருமில்லை, இத்தனை சக்திகளும் படைத்திருந்த அன்றே அவர்களால் இந்திய தேசிய இனத்தை உருவாக்க முடியாமல் போனது, இப்போது எப்படி உருவாக்க முடியுமென்ற கேள்வியை முன்வைக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, புத்தகத்தை இரு பாகமாக நான் பிரிக்கிறேன். முதல் பாகத்தில் பொதுவாக மனித குலம், தேசிய இனங்கள், ஏகாதிபத்தியம் போன்ற பொதுவான விஷயங்களை விளக்குவதாகத் துவங்கி, பின் பாகத்தில் தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தேசிய சிக்கல்களையும், தமிழ்த் தேசியத்தின் தேவையையும் விளக்குகிறார்.
தமிழ்த் தேசியம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகம் தந்தாலும், மொத்தத் தேவையை விளக்குவதற்காக எத்தனைச் செய்திகளைச் சொல்ல வேண்டுமோ அத்தனைச் செய்திகளையும் விளக்குகிறார், தமிழ்த் தேசியம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்த அந்தச் சிறு அத்தியாயம் ஒன்றே போதும், வேறு எந்த புத்தகங்களும் தேவையில்லை. இந்தியத் தேசியமெனும் சிறைக்குள் அடைபட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் சிக்கல்களை மேலோட்டோமாக விவரிக்கிறார். அதேபோல அருகாமை தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசியத்துக்கான பிரச்னைகளையும் தருகிறார். கடைசி அத்தியாயத்தில் தமிழ்த் தேசியம் அமைய வேண்டிய தேவையையும், ஈழப் போராட்டத்தையும் தருகிறார்.
ஒட்டுமொத்தமாய், இப்புத்தகம் தேசிய இனங்கள் பற்றிய பார்வையையும், தேசிய இன கருத்தாக்கங்களின் தோற்றம் மற்றும் அதன் போக்கோடு, தமிழ்த் தேசியத்தைப் பொருத்தி விளக்குவதற்கான ஒரு வழிமுறைக்கையேடாகவும் இந்நூல் சிறந்து விளங்கும்.


தமிழ்த் தேசியம்திராவிட இயக்கம்திராவிடம்புத்தகம் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License