• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

சாதியை ஒழிக்கும் வழி ~ அம்பேத்கர் – புத்தக அறிமுகம்

11 Jul 2014

Reading time ~6 minutes

“…அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்…
~ அம்பேத்கர்”

 

இந்தியாவின் அத்தனைச் சமூகச் சமனின்மைக்கும், சிக்கல்களுக்கும் காரணமாய் சாதிதான் மைய இழையாக விளங்குகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குரு ஏழாம் கட்டத்திலிருந்து எட்டாம் கட்டத்திற்குத் தாவியதும் புரட்சி வந்துவிடும், இதோ புரட்சி வருகிறது என்று முக்காலம் உணர்த்தும் வினைச்சொற்களில் பேசிவருபவர்கள், வர்க்கத்துக்குக் கீழ் நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சாதியைப் புறக்கணித்ததால் புரட்சி அடுத்த  முட்டுச்சந்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறது. இந்தப் பார்வைக் கோளாறை உணர்ந்தச் சிலரில் பெரியாரும் அம்பேத்கரும் சமகாலத்தவர்கள்.

 

சமூகக் கேடுகளை ஒழிக்க சாதியை ஒழிக்க வேண்டும், சாதியைக் கட்டிக்காப்பாற்றும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து இயங்கியவர் பெரியார். சாதியை ஒழிக்கும் வழிகளை வரலாற்றுப் பூர்வமான பார்வையோடும் தீர்க்கமான விவாதங்களோடும் அம்பேத்கர் முன்வைத்த ஒரு உரை “Annihilation of caste”.

 

ஜாத்-பட்-தோடக்-மண்டல் என்ற சீர்திருத்த அமைப்பின் மாநாட்டின் தலைவராக அம்பேத்கரை அவர்கள் அழைத்து அதற்கான தலைமை உரையாகத் தயார் செய்யப்பட்டு, இந்த உரையின் கருத்துகள் சிலவற்றோடு மண்டலுக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டம் நடைபெறாமல் போனதால், அந்த உரையைப் புத்தகாமக வெளியிட்டார் அம்பேத்கர். இந்த நிகழ்வுக்குச் சில ஆண்டுகள் முன்பாக பெரியாரையும் இதே அமைப்பு இது போன்றதொரு மாநாட்டுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, பிறகு ‘இந்த நபர் ஒரு இந்து மத விரோதி, சாஸ்திர விரோதி’ எனப் பலவாறு பலரால் தூபம் போடப்பட்டு பெரியாருக்கு விடுத்த அழைப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

 

இந்த உரை வெளியான அடுத்த ஆண்டே பெரியார் குடியரசு இதழில்  ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற பெயரில் ஒராண்டுகளுக்குத் தொடர் கட்டுரைகளாக மொழிபெயர்த்து வெளிவரச் செய்திருக்கிறார், பின்னர் புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசின் முழு இதழிலும் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது, பின்னர் ஒலிநூலாகவும் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கர் நூல் தொகுப்பின் முதல் பாகத்தில் இந்த உரை முழுதும் இருக்கிறது. சமீபத்தில் நவயானா பதிப்பகம் இந்த உரையை புத்தகமாக அருந்ததி ராயின் முன்னுரையோடு வெளியிட்டது.

 

புத்தகத்தை நம் வசதிக்காக நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.

 

முதல் பகுதி, சாதியின் பல்வேறு பரிமாணங்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சோசலிஸ்ட்டுகளின் பொருளாதாரச் சமத்துவம் என்ற கோட்பாட்டை சாதியும் மதமும் இங்கு எப்படி பொருளில்லாததாக மாற்றுகிறது (அம்பேத்கரும் ஒரு பேபியன் சோசலிஸ்ட்தான்), புரட்சியை முன்னெடுக்கும் ஒற்றை வர்க்கத்தின் உருவாக்கத்தை தடுக்கும் காரணியாக சாதிதான் விளங்குகிறது என்பதையும், சாதியின் தோற்றம் அதன் அவசியம் பற்றிக்கூறப்படும் பல கருத்துகளை மறுப்பதும், இந்துக்களின் கூடிவாழும் சமூகமாய் வாழும் பன்பு இல்லாமைக்கான காரணங்கள் பற்றியும், இந்துமதம் ஏன் பரப்புரையில் ஈடுபட்டு மதமாற்றம் செய்வதில்லை என்பதையும், இங்கே ஒவ்வொருவருக்கும் சாதி எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது, சாதியின் பெயரால் ஒவ்வொருவருக்கும் கீழே உள்ளவனை மேலே உள்ளவன் அடக்குவதின் உளவியலையும், சாதியானது தொழில்தேர்விலும் பொருளாதார ஏற்றத்தாழ்விலும் பங்குவகிப்பது என்று பலதையும் இந்தப் பகுதியில் விளக்குகிறார்.

இரண்டாம் பகுதி சாதிகள் ஏன் ஒழிக்கப்பட்டு சமத்துவம் நிலவ வேன்டும் என்பதற்கான காரணங்களைக் கொண்டிருக்கிறது. சாதி ஒழிக்கப்பட்டு சமத்துவம் நிலவாத வரையில் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி நிலவியே தீர வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகிறார்.

…மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாயிருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்தளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விசயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள். ஆனால், இது திறமை உள்ளவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வு ஆகாது; விசேச உரிமைகள் பெற்றவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வாகவே இருக்கும்.
…சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால், ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான் அவ்வாறு உயர்ந்த பலனைப் பெறுவதற்கு வழியாகும்.
~ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 85

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கூச்சல் உண்மையாக, சாதியை ஒழித்து சமத்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையாகத்தான் இருக்க வேண்டும் என்ற புரிதலை இந்தப் பகுதி நமக்கு விளக்குகிறது.

மூன்றாம் பகுதி, வர்ணாசிரமத் தர்மத்துக்கும் சாதிக்குமான உறவும், வர்ணமுறையில் உள்ள முரண்பாடுகளையும், சாதியைக் களைந்துவிட்டு தகுதியின் அடிப்படையிலான புதிய வர்ண முறையை  முன்வைத்த ஆரிய சமாஜிகளைப் பற்றிய விமர்சனத்தையும் அது ஏன் சரியான வழிமுறையை கொண்டிருக்கவில்லை, சாதி ஒழிப்புக்கு அப்போது (அம்பேத்கர் காலத்தில்) கூறப்பட்ட கிளைச்சாதி ஒழிப்பு, சமபந்தி போன்றவை ஏன் பொருத்தப்பாடு இல்லாததாக உள்ளது போன்ற கருத்துக்களை இந்தப் பகுதியில் முன்வைக்கிறார்.

நான்காம் பகுதியில், புத்தகத்தின் மையமான சாதிகளை ஒழிக்கும் வழியை விளக்குகிறார். இந்தப் பகுதியில் மண்டல் அமைப்பினரை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள், அவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள் என்று இருப்பதாலேயே படிப்பவரை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளாகவும், வழங்கப்படும் அறிவுரைகளாகவும் இருக்கிறது.

சாதியை அதற்கு நேருக்கு நேராக நின்று தாக்கும் தாக்குதல் என்பதாகப் பின்வருமாறு “… சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது…” கூறுகிறார்.

சாதி என்பது அன்றாடம் நாம் கையால் தொட்டுப் பயன்படுத்தும் ஒரு பொருளில்லை, அது ஒரு மனப்பான்மை. மக்களின் மனங்களில் புரையோடிப்போயிருக்கும் மனப்பான்மை. மதம், வேதம், புராணம், கடவுள் போன்ற புனிதக் கூட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சாதி என்கிற மனப்பான்மை தெய்வீகமானது என்ற கருத்தாக உருவாக்கப்பட்டிருக்கிறது. “… சாதிக்கு இருக்கும் புனிதத் தன்மையையும் தெய்வீகமானது என்ற கருத்தையும் அழிக்காமல்…” இந்த சாதி மனப்பான்மையை ஒழிக்க முடியாது, இதற்கு அதன் அடிப்படைக் கட்டமைப்புகளைத் தாக்கிச் சீர்திருத்த வேண்டும்.

இந்துமதத்தின் ஸ்ருதிகள், ஸ்மிருதிகள் தத்துவக் கருத்துக்களாக இல்லாமல், சட்ட விதிகளாகவே இருக்கிறது. “…இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியான வகுப்பு ஒழுக்குமுறையே…” என்கிறார். காலத்துக்கு ஒவ்வாத, சமத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய சட்ட விதிகளை நீக்கி விட்டு இந்து மதம் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இயங்கும்படி செய்ய வேண்டும். அந்த அடிப்படை தத்துவமும்  அல்லது கோட்பாடு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்ட சனநாயகத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கர் கூறும் சாதியை ஒழிக்க மதத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து இந்த அடிப்படையிலானதே.

புத்தகத்தின் இறுதிப்பக்கங்களைப் படிக்கும் போது பெரியாரும் ஏறக்குறைய இதுபோன்றதொரு கருத்தை இன்னும் தீவிரமாகப் பேசியிருக்கிறாரே என்று நினைவுக்கு வந்தது. தேடியபோது, அந்த பேச்சும் கிடைத்தது.

“…முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவு தெரிந்துவிடவேண்டும். இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு கீழோ,மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்குமேல் சாதிவித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ளவைகளை அடியோடு அழிக்க முயலவேண்டும். அப்படிச் செய்யாமல், உயர்வு தாழ்வைப் போக்கி விடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும். சாதி, ஆசாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. சாதியை மரத்திலிருந்து பிரிக்க வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு முடியாத வரையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றையொன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால், சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்துச் சாம்பலாக்க வேண்டியது தடுக்கமுடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம்,புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாய் இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான். ஆனால், இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத இணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துதான் ஆக வேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி,மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது….
…இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்துபோகுமேயென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தைப் பொசுக்கும் போது வேதமும் பொசுங்கிப் போவதாயிருந்தால் அந்த வேதம் என்பதும் இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பதும் இந்த நிமிசத்திலேயே ஓடிவிடட்டும். அப்படிப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம். “
~ பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 4, மதமும் கடவுளும் 1, பக்கம் 2244-45

இந்தக் கருத்தைப் பெரியார் எந்த காலகட்டத்தில் பேசியிருக்கிறார் என்று பார்த்தால் 1929 ஆம் ஆண்டு. அம்பேத்கரையும் அவர் கருத்துக்களையும்  தமிழகத்துக்குப் பெரியார் அறிமுகப்படுத்திய ஆண்டு இதுதான் என்கிறார் எஸ்.வி.இராஜதுரை.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் இப்போதைய தேவை என்ன?

அம்பேத்கரின் இந்த உரையைப் பற்றி மகாத்மா காந்தி அரிஜன் இதழில் எழுதிய சில கட்டுரைகளும், அதற்கு அம்பேத்கரின் எதிர்வினைகளும் கூட இந்தப் புத்தகத்தோடே தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த மறுப்புரையில் மகாத்மா காந்தி பின்வருமாறு கூறுகிறார்,

“எந்தச் சீர்திருத்தவாதியும் அவரது உரையைப் புறக்கணிக்க முடியாது. பழமை மரபுள்ளவர்கள் அதைப் படிப்பதால் பயனுறலாம். இப்படிச் சொல்வதால் அவருடைய உரை மறுப்புக்குரியது அல்ல என்று பொருளாகாது. மிகவும் தீவிரமான மறுப்புக்குரியது என்பதற்காகவே அதைப் படிக்க வேன்டும்…”

மகாத்மாவின் வார்த்தைகளைப் பழமைவாதிகளும், சங் பரிவார்களும் அப்படியே பின்பற்றி இந்த நூலில் என்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தின் குறைபாடுகள் என்று அம்பேத்கர் பட்டியலிடப்பட்ட பலதை இன்றைய சங் பரிவாரங்கள் வேறு வகையில் திருப்பிக்கொன்டிருக்கின்றன. “…கிறித்துவ மிசனரிகளைப் போல ஓர் இந்துவால் பழங்குடிகளுக்கு காரியமாற்ற முடியாது…’ என்று அம்பேத்கர் கூறியிருந்தார். இன்று கிறித்துவ மிசனரிகளைத் துரத்திவிட்டு காவிக்கொடிகளை பழங்குடிகளின் குடிசைகளில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்துக்களுக்கு என்று பொதுவான மனப்பாங்கு இல்லை என்று கூறியதைத்தான், விராட் இந்து, இந்து ஒற்றுமை என்று சுனாமனா சாமி வேலைத்திட்டமாக வைத்துக்கொண்டிருக்கிறார். வேத, புராணங்களின் மதிப்பு குறைக்கப்படாமல் சாதிகள் ஒழியாது என்றதைச் சரியாக புரிந்து கொண்ட இந்துத்துவ வாதிகள் வேத,புராணங்களின் மதிப்பை உயர்த்தும் செயற்பாடுகளைச் செய்துகொன்டிருக்கின்றன.

சாதியை ஒழிக்கத் தேவையான முதல் வழியாக அம்பேத்கர் கூறும் கலப்புத் திருமனங்களுக்கு ஆபத்து நேர்ந்திருக்கும் காலம் இது, இளவரசனும் மற்றபிற ஆயிரத்தெட்டு கௌரவக் கொலைகளும் இதைத்தான் கூறுகின்றன. சாத்திரங்களின் (ஸ்மிருதிகள், ஸ்ருதிகள்) உண்மைத்தன்மையை விளக்கி, அவற்றின் புரட்டுகளைப் போட்டு உடைத்து அவற்றின் உயர்நிலையைக் குறைக்காத வரை இந்தச் சாதி ஒழியாது என்று அம்பேத்கர் சொன்னவற்றுக்கு மாறாக இன்று இவற்றின் பெருமையை உயர்த்திப் பிடித்து மேலும் சாதியை வலுவாக்கும் வழிமுறைகள் தானே நடந்துகொண்டிருக்கின்றன. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதானால், “…நீங்கள் எந்தத் திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாது…” இது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான கருத்தாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஒரு தனிமனிதனுக்குரிய கருத்தாக எடுத்துக்கொண்டாலும் சரி, அவர் இந்தப் புத்தகத்தில் வழிகாட்டியிருக்கிறார்.

—–

 



அம்பேத்கர்இந்தியாசாதிகள்புத்தகம்பெரியார் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License