• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

அகோரா – மதத்தின் மகத்துவம்

15 Dec 2011

Reading time ~4 minutes

“இதயமற்ற உலகில் இதயமாக ஆன்மாவற்ற உலகில் ஆன்மாவாக ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக மக்களுக்கு அபினாக….“ –காரல் மார்க்ஸ்

” இந்தக் கடவுளை போட்டு உடைக்கிறேனே, வசைபாடுகிறேனே எதிர்த்து ஒன்றுமே சொல்வதில்லையே ஏன்? கேட்கும் திறனையும், பேசும் திறனையும் உணர்ச்சியையும் இழந்துவிட்டாரோ? “ இதெல்லாம் பொய்யும் புரட்டும் உடல் முழுதும் கொண்ட நச்சு நாத்திகர்களுடைய பேச்சு போலவே இருக்கிறதில்லையா? அவர்களுடைய வேலையே இதுதானே. இந்த திராவிட இயக்கப் புல்லுருவிகள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் உடன் சேர்ந்து விநாயகர் சிலைகளை உடைத்தபோதோ, ஒருவனுக்கு ஒருத்தி என்பதைப் போதித்த ராமபிரானின் படங்களைச் செருப்பால் அடித்தபோதோ உதிர்த்த வெற்றுச் சவடால்களாக இருக்கும்.

ஆனால், இவை திராவிடத் திமிர்பிடித்த புல்லுருவிகளின் பேச்சல்ல. அன்பை போதித்தவரும், மறு கண்ணத்தைக் காட்டியவருமான இயேசுபிரானின் மதத்தில் வந்தவர்கள் உதிர்த்தவை. கிறித்துவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்து வந்த பேகன்களின் கடவுள் சிலைகளை அவமதித்து, உடைத்தெறிந்து, பேகன்களை விரட்டியடித்து, அலெக்சாந்திரியாவின் நூலகத்தை சிதைத்து, பேகன்களை கட்டாயமாக மதமாற்றம் செய்து, அவர்களது கடவுள்களை பரலோகத்தில் பூட்டிவைத்துவிட்டு கிறித்துவர்களின் கடவுளை ஏற்காதவர்களை, அவர்களின் தோலை உரித்துப் பார்த்து, தீயிலிட்டுப் பொசுக்கி, கிறித்துவத்தை வளர்த்தபோது உதிர்த்தவைதான் இவை.

அறியாமல் இவர்கள் செய்த பிழையை மன்னிக்குமளவுக்குப் பரிதாபபட்ட தேவகுமாரனைக் கொண்ட ஒரு மதம் எப்படி இத்தனை கொடூரங்களைச் செய்திருக்கும்? ஏற்கனவே கிறித்துவம் வளர்ந்த விதம் அறிந்தவர்களுக்கு கிறித்துவம் உலகமெல்லாம் அன்பை போதிக்க ரத்த ஆற்றைக் கடந்து வந்தது தெரியும். சிலுவைப்போர் போன்ற வரலாறெல்லாம் தெரியாதவர்களுக்கு கிறித்துவக் குருத்துகளின் வழியே ரத்தக் குளியல் நடத்தப்பட்ட சிலுவையைக் காட்டுகிற படம் ”அகோரா(agora)”.

பண்டைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தின் நூலகத்தில் ஐப்பேசியா(hypatia) மாணவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார், ஏன் நட்சத்திரங்கள் விழுவதில்லை, உங்கள் கையிலிருந்து விடுபடும் கைக்குட்டை ஏன் கீழே விழுகிறது என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாது இதெற்கெல்லாம் காரணம் ஈர்ப்புவிசை என்று. இன்னும் நியூட்டன் வரவில்லை, ஈர்ப்புவிசை கண்டறியப்படவில்லை, அது தாலமியின் காலம், பூமியை மையமாக வைத்து எல்லாம் சுற்றிவரும் ஒரு மாதிரியைத் தந்து அந்த மாதிரியிலேயே பிரபஞ்சத்துக்கு அப்பால் பரலோகத்துக்கும், பரமபிதாவுக்கு இடமளித்திருப்பார். (இதை Stephen Hawkings தன்னுடைய Brief history of time நூலில் பகடி செய்திருப்பார்.)

இது நூலகமாக மட்டும் செயல்படாமல், பேகன்களின் வழிபாட்டு இடமாகவும் இருக்கிறது. மேலே சொன்னது போல பேகன்களின் கடவுள்களை கிறித்துவர்கள் அவமதித்த போது பேகன்கள், தங்கள் கடவுள்களை மதிக்காத கிறித்துவர்கள் தங்கள் வாளுக்குத்தான் அடங்குவார்கள் என்று கிறித்துவர்களைக் கொல்ல கிளம்புகிறார்கள்.

அதுவரை, வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடங்கி வாழ்ந்த கிறித்துவர்கள் கைகளில் சிலுவையை ஏந்தி பேகன்களைத் தாக்கத்துவங்குகிறார்கள். நூலகத்தை கிறித்துவர்கள் முற்றுகையிடுகிறார்கள், பிறகு பேச்சு வார்த்தையில் அரசர் பேகன்களை மன்னிக்கிறார், பதிலுக்கு நூலகத்தை விட்டு பேகன்கள் வெளியேறிவிடவேண்டும். பேகன்களை வெளியேற்றி நூலகத்தை அழிக்கிறார்கள் கிறித்துவர்கள். சில ஆண்டுகளில் நகரம் கிறித்துவர்களின் ஆதிக்கத்துக்கு வருகிறது. பேகன்களின் வழிபாட்டு முறைகளும், கடவுள்களும் தடை செய்யப்படுகிறார்கள், ஆனாலும் சில பேகன்கள் கிறித்துவத்தை ஏற்க மறுக்கிறார்கள், ஐப்பேசியாவும் அவர்களில் ஒருவர், அவர்கள், கிறித்துவத்துக்கு அத்தனை வலிமையான எதிரிகள் இல்லை, இத்தனைக்கும் ஐப்பேசியாவின் சீடர்கள் நகரத்தின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள், நகரத்தின் தலைவரே ஐப்பேசியாவின் முதன்மை சீடர்தான். இப்போது கிறித்துவத்துக்கு போட்டியாக அங்கே இருக்கும் ஒரே மதம் யூதமதம்தான்.

பேகன்களைக் அழித்து அலெக்சாந்திரியாவை கட்டுக்குள் கொன்டுவந்தபிறகு, மிச்சமிருக்கும் யூதர்களையும் தீர்த்துவிட்டால் முழு ஆதிக்கம் நமதுதான் என்பதை உணர்ந்து அதையும் செய்கிறார் சிறில் (பின்னாளில் புனிதர் பட்டம் பெற்ற அப்போதைய அலெக்சாந்திரியா நகரின் பேராயர்). யூதர்களுக்காக பரிதாபப்படும்படிச் சொல்லுகிறார் சிறில். “கர்த்தரைக் கழுவிலேற்றிய யூதர்களுக்காகப் பரிதாப்படுங்கள் கிறித்துவர்களே! நிலமின்றி அலைந்து திரியப்போகும் யூதர்களுக்காகப் பரிதாபப்படுங்கள் கிறித்துவர்களே!” என்று அழுத்திச் சொல்கிறார்.

யூதர்களுக்கு எதிராக கிறித்துவர்களின் வெறியாட்டம் துவங்குகிறது, ஒட்டுமொத்தமாக துடைத்தழிக்கப்பட்ட யூதர்களுக்குப் பிறகு கிறித்துவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் நகரம் வருகிறது. நகரம் முழுக்க கிறித்துவர்கள் தான், இன்னும் சில பேகன்கள் மட்டுமே கிறித்துவத்தை ஏற்காமல் இருக்கிறார்கள் (ஐப்பேசியாவும் அவர்களில் ஒருவர்). அவர்களையும் கிறித்துவத்தைத் தழுவச் செய்கிறார்கள். இனி ஐப்பேசியாவை கிறித்துவத்துக்கு மாற்றுவது மட்டுமே மிச்சம். —- படம் முழுக்க ஐப்பேசியாவைச் சுற்றியே வருகிறது. ஆசிரியராக இருந்ததோடு அழகாகவும் இருந்திருக்கிறார், அந்த அழகு அவருக்கு தந்த காதல்களையும், அவர் அறிவு அவருக்குத் தந்த ஆபத்தையும் படம் பேசுகிறது. பூமியும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது என்று சோதனை செய்துவிட்டு குதிப்பதாகட்டும், வட்டத்தைத் தாண்டிய இன்னொரு வடிவத்தைத் தேடும்போது காட்டும் தவிப்பாகட்டும், அப்பலொனியன் கூம்பை கழற்றிப்போட்டு அந்த வடிவத்தைக் காணும்போது ஆகட்டும், ஒரு குழந்தை சர்க்கரை தித்திக்கும் என்பதை உணர்ந்த முதல் நொடி காட்டும் குதூகலத்துக்கு ஒப்பானது. இன்று, நம்மை பொறுத்தவரை இதெல்லாம் ஆறாம் வகுப்பில் ஐந்துவரியில் படித்துவிட்டு நான்கு நாளில் மறந்த சமாச்சாரங்கள். ஆனால், ஐப்பேசியாவின் காலத்தில் அது புரியாத புதிர். இப்படி படம் முழுக்கப் பேசும் அறிவியலெல்லாம் இன்று அடிப்படை அறிவியலைச் சேர்ந்தவை, ஆனால் அந்த அடிப்படை அறிவியலுக்கே மதம் அன்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது, கலிலியோ இறந்த 400 ஆண்டுகளுக்குப் பிறகே வாட்டிகன் அவரை ஏற்றுக்கொண்டது.

நவீன அறிவியலின் ஆதிக்கம் வளரத் துவங்கியபிறகு மதத்தின் ஆதிக்கம் குறைந்திருக்கிறது அல்லது மதத்தின் ஆதிக்கம் குறைந்தபிறகு அறிவியல் வளரத்துவங்கியிருக்கிறது என்பதை மறைமுகமாக படம் நமக்கு உணர்த்துகிறது. படத்தில் ஒரு இடத்தில் கிறித்துவத்தை ஏற்காததற்கு காரணம் சொல்வார், “நீ உன் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால், நான் செய்ய வேண்டும்?” இந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியவரை மதம் என்ன செய்தது என்பதையும் பதிவுசெய்கிறது படம்.

கிறித்துவத்தின் கொள்கைகளோடு முட்டிக்கொள்கிற மதங்களை நசுக்கிய வரலாற்றோடு, கலிலியோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலுக்குப் போட்ட முட்டுக்கட்டையையும் இந்த படம் பதிவுசெய்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தின் மையக் கருவே ஒரு எளிய (இன்றைய அறிவியலின் நிலையை ஒப்பிடும்போது) அறிவியல் கோட்பாட்டின் உருவாக்கத்தையே உருவாகவிடாமல் தடுக்கப்பட்ட வரலாற்றை பதிவு செய்வதுதான். அந்தக் கருத்தாக்கம் முழு வடிவம் பெற்று வெளியிடப்படவே அதற்குப் பிறகு 1200 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கருத்தாக்கத்தை தனது பெயரில் வெளியிடவே அந்த விஞ்ஞானி அஞ்சுகிறார், –எல்லாம் கிறித்துவத்தின் மீதிருக்கும் பயங்கலந்த மரியாதை – அதனால் வேறொரு பெயரை சூட்டிக்கொண்டு அந்த பெயரில் அந்தக் கருத்தாக்கத்தை வெளியிடுகிறார். அந்த விஞ்ஞானி “கோப்பர்நிக்கசு“, அந்தக் கருத்தாக்கம் “சூரிய மையக் கோட்பாடு“, –இதன்பிறகே நவீண அறிவியல் நாலுகால் பாய்ச்சல் எடுக்கிறது, கலிலியோவுக்கு பலர் நவீண அறிவியலின் தந்தை எனும் பட்டத்தை தருகிறார்கள், சிலர் கோப்பர்நிகசுக்கு தருகிறார்கள்.- ஐப்பேசியாவுக்கு முன்பே இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி “அரிசுடார்க்கசு” என்ற நபரும் பேசியிருக்கிறார், ஆனால், அவருடைய படைப்புகள் எதுவும் ஐப்பேசியாவின் காலத்திலேயே இல்லை.

அதுபோலவே, ஐப்பேசியாவின் படைப்புகளும் எதுவும் எஞ்சியில்லை, அதனால், படத்தில் காட்டப்படுவதைப் போல புவியின் இடத்தை சூரியக் குடும்பத்தில் அவர் நிர்ணயித்ததாகவோ, அல்லது புவி சூரியனை சுற்றும் பாதையை கண்டறிந்ததாகவோ நம்பலாம் நம்பாமலும் போகலாம். இவருடைய இருப்பையே இவரைப்பற்றிய மேற்கோள் நூல்களிலும், கடிதங்களிலிருந்துமே அறிய முடிகிறது. வென்றவர்களால் வரலாறு எழுதப்படும் போது, சில பக்கங்கள் முழுமையாக கருமையாக்கப்பட்டுவிடுகிறது. அங்கெல்லாம் வெள்ளை எழுத்துகளை காலம் எழுதிச் செல்கிறது.

ஐப்பேசியா, உண்மையில் மேற்கூறிய இரண்டையுமே கண்டறியாமல் போயிருந்தாலும், இந்தப் படம் நமக்கு கிறித்துவத்தின் இன்னொரு பக்கத்தை படம்பிடிக்கிறது. அதே சமயத்தில் கிறித்துவம் மட்டுமல்ல எல்லா மதங்களும் அன்பை போதிக்க அடக்குமுறையைக் கையான்டேயிருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது.

“அவர் கொலை செய்யப்பட்டு, துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு அவருடைய படைப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டன, அவர் பெயர் மறக்கப்பட்டது. சிறில் புணிதராக்கப்பட்டார்” -கார்ல் சாகன்

நம்மூரிலும் 8000 சமணர்களை சைவர்கள் கழுவிலேற்றிய சம்பவம் சிறப்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கழுமரத்தை மூலவராக வைத்து வணங்கிக் கொண்டும், கழுவிலேற்றியதை பல கோவில்களில் ஓவியமாகத் தீட்டி ஆதிக்கத்தை பறைசாற்றிக் கொண்டும், அதிலும் சமணர்கள் தாங்களே விருப்பப்பட்டு தங்களைக் கழுவிலேற்றிக் கொண்டதாயும் வரைந்து வைத்திருக்கிறோம்.

வலுத்தது வாளெடுத்து வாழும், மற்றது வீழும்.



அகோராஅறிவியல்கிறித்துவம்திரைப்படம் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License