• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்

15 Nov 2010

Reading time ~3 minutes

மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்திருக்கிறது.

“பதினேழு முறை தோற்றவன், இறுதியாக வென்றான்,” “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” என்றெல்லாம் வியாக்கியானம் பேச எல்லாராலும் மேற்கோள் காட்டப்படும் முகமது கஜினியின் வரலாறே திரிக்கப்பட்டுத் தான் இப்படி வியாக்கியானம் பேசத் தகுதியான கதையாக உருமாறியிருக்கிறது. இப்படிச் சொல்லப்படும் கதையெல்லாம், வரலாறு தெரியாதவர்களால் ஊதிவிடப்பட்டதென்று ஒதுக்கிவிடலாம். ஆனால், நீங்கள் சொல்லும் வரலாறு ஊதி பெரிதாக்கப்பட்டது தானென்று ஒரு குரல் கேட்கும் போது அதைக் கூர்ந்து கவணிப்பது அவசியமானது தானே?
சோமநாதர் கோயில் கஜினியின் முகமதுவால் இடிக்கப்பட்டது என்பதிலிருந்து நேரெதிராக இரு சக்திகளை முன்னிறுத்தும் வகைப்பட்ட வரலாறு இந்தியாவில் துவங்குகிறது. இந்து–முஸ்லீம் வெறுப்புணர்வின் அடிநாதத்தைத் தேடிக் கொண்டே போனால், அது கோயில்களை இடித்து தங்கள் மத வழிபாட்டு நிலையங்களை மேம்படுத்தினார்கள், மதத்தை அழித்தார்கள், என்ற குற்றச்சாட்டிலேயே போய் நிற்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நேற்றைய நீதி மன்ற தீர்ப்பு வரை நீளும் பிரச்சினைதான் இது. நீரோடைக்கு அடியில் இருக்கும் பிரச்னை இது, பல குட்டைகளையும் போட்டு குழப்பியதில் தெளிவாக பார்க்க முடியாமல், மேலே குழம்பியை ஒரு சகதியை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, காசுமீர் பிரச்னையா, அதோ அந்தாண்டை இருந்து பாகிஸ்தான் காரன் கல்லு குடுக்குறான்யா என டீக்கடைகளில் பெஞ்சை தேய்த்துவிட்டு டீயை காலி செய்துவிட்டு போய்விடுகிறொம். பிரச்னையின் ஆணிவேர் துவங்கிய சோமநாதர் கோயில் இடிப்பின் வரலாறும் கதையும் இந்நூலில் (உரையில்) சொல்லிச் செல்கிறார் ரூமில தாப்பர்.
இந்நூலைத் துவங்கும் போது, கோவில் கொள்ளயடிக்கப்பட்டதற்கு முன்பு அங்கு நிலவிய சூழல், அன்றய சமூக அமைப்பு , போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி, இந்த ஆய்வை முன்னெடுக்க தான் எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும், அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார்.
அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஐந்து வகையான சான்றுகள்,

  1. துருக்கிய–பாரசீகச் சான்றுகள்
  2. முகமது காலத்திய சமணச் சான்றுகள்
  3. சோமநாதபுரத்திலுள்ள் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்
  4. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த விவாதங்கள்
  5. தேசிய வாதிகளின் பார்வைகள்

இந்த ஐந்து வகைச் சான்றுகளில் இருந்து, ஒவ்வொன்றையும், விளக்கி, கஜினியின் முகம்மது சோமநாதர் ஆலய கொள்ளை மற்றும் சிலை உடைப்பால் மட்டுமே இஸ்லாத்தின் வெற்றியாளராக கருதப்படவில்லை என்பதையும், அன்றைய நாளிலிருந்து இன்று வரைத் தொடரும் ஷியா–சன்னி உள்ளடிச் சண்டைகளில் முகம்மதுவின் நிலைப்பாட்டாலும், அன்றைய குதிரை வணிகத்துக்கும் உள்ள தொடர்பினாலும் ஆதிக்கப் போட்டியுமே முகம்மதுவை இஸ்லாத்தின் வெற்றியாளராக நிலைத்திருக்கச் செய்யும் காரணங்களென்றும் விளக்குகிறார்.
சோமநாதபுரக் கோயில் முகம்மதுவால் மட்டுமல்ல, அன்றைய உள்நாட்டு அரசர்களாலும், கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டதற்கான சான்றுகளின் குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார். சோமநாதபுரக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமில்லாமல், அன்றைய அதிகார குவிப்பிடமாகவும், மையமாகவும் விளங்கியதால்தான் அன்றைய நாளில் உள்நாட்டவர் பலராலும் தாக்கப்பட்டதாகவும் இவர் சொல்கிற கருத்தை ஏற்காமல் இருக்க முடியாது. அன்றைய சைவ–சமண, சிவன்–மகாவீரர் போட்டிகளின் நிலையையும் ஒருவர் மீதான மற்றொருவரின் வெற்றிகள் கூறும் வேறொரு வகையான வரலாற்றுக்கதையையும் சமணச்சான்றுகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.
சோமநாதபுரத்திலுள்ள சமஸ்கிருத மொழியிலுள்ள கல்வெட்டு ஒன்று, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிறுபகுதி, ஒரு மசூதி கட்டுவதற்காக தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணமாக விளங்குகிறது, சமஸ்கிருதத்திலும் அரபிய மொழியிலுமாக இந்த கல்வெட்டுகள் உள்ளன, கோவில் இடிப்புச் சம்பவத்தின் இருநூறு ஆண்டுகளில் இந்நிகழ்வு நடந்துள்ளது, அன்று மதச் சகிப்புத்தன்மை அந்தளவுக்கா இருந்தது? இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா? ரூமிலாவே விடையுமளிக்கிறார். இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி இன்று என்ன கொள்கைகள் நிலவுகிறதோ அதற்கு நேர்மாறானவை அன்று நிலவியிருக்கிறதென்பதை, அன்றைய வரலாறு சொல்கிறது என்கிறார்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தின் மீதான இந்துமத வெற்றியாக, (முன்னொரு காலத்திலோ, நீங்கள் தோற்றவர்கள், என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவும்) ஆப்கன் படையெடுப்பின் போது, சோமநாதபுரக் கோயிலிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்லப்படாததாக கருதப்பட்ட கதவை, முகம்மதுவின் கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்து வருவது, அன்றைய கம்பெனியாரின் நோக்கமாக இருந்து வந்ததையும், கதவு எடுத்து வந்த பிறகுதான், அதில் துளியும் இந்தியத்தன்மை இல்லாததும், எகிப்திய தனமைகள் மிகுந்திருந்ததும், கதவு பற்றியது கட்டுக்கதையே என்றும் சொல்கிறார். இவை பிரிட்டீஷ் நாடாளுமன்ற விவாத ஆவணங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் தகவல். இந்து–முஸ்லீம் துவேஷத்திற்கு தூபம் போட, மீண்டும் முகம்மதுவின் கொள்ளை கிளறப்பட்டதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.
மீண்டும் சோமநாதர் ஆலயம் அரசு சார்பாக புதுப்பிக்கப்படுவதும், அரச பிரதிநிதிகள் அவ்விழாவில் கலந்து கொள்வது, மதச்சார்பற்ற தன்மைக்கு குந்தகத்தையும், மதத் துவேஷத்தையுமே வளர்க்கும், அது இந்து தேசிய உணர்ச்சியின் வளர்ச்சிக்கே உதவுமென்ற கருத்து கொண்டிருந்த நேருவின் கொள்கைக்கும் மற்ற இந்து தேசியவாதிகளுக்குமான முரண்பாட்டை ஐந்தாவது வகை ஆதாரமாகக் கொண்டு, மதப்பூசல்களுக்காக கிளறப்படுவதையும் விளக்குகிறார்.
ஒருநிகழ்வு, பலவேறு விதமான ஆதாரங்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு விளங்குவது, உண்மையான வரலாற்றுக்கு நம்மை இட்டுச் செல்லாமல், ஒவ்வொருவரும் தான் எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ, அதை நோக்கிய முன் முடிவோடே செல்லும் நிலையை கொண்டு செல்லும் என்பதையும், அது என்றுமே வரலாற்றைப் படிப்பதற்கான சரியான அனுகுமுறை அல்லவென்பதையும் விளக்குகிறார்.
சோமநாதபுரக் கோவில் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு நூல் ஒன்றை ரூமிலா தாப்பரே எழுதியிருக்கிறார், கிடைத்தால் அதையும் படிக்க வேண்டும்.
</div>



புத்தகம்ரூமிலா தாப்பர்வரலாறு Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License