• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்

08 Oct 2010

Reading time ~3 minutes

“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ்

விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த மண்ணை ஒரு இனம் மீட்கவில்லையா? தோல்விகள் வெற்றியை நோக்கிய போராட்டங்களை ஒத்திப் போட்டிருக்கிறதேயொழிய, முடக்கி விடவில்லை. ரஷ்யாவில் 1905ல் என்ன நடந்தது? க்யூபாவில் ஜூலை 26 இயக்கம் எதைச் சொன்னது?

ஒவ்வொரு போராட்ட வடிவமும் அடக்கப்படும் போது, இன்னொரு வடிவம் பிறக்கிறது. அந்த வடிவம் தோற்றுப் போனால் இன்னுமொரு வடிவம். காலம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கற்களைக் கொண்டு வேட்டையாடிய சமுதாயம், இன்று ஏவுகனைகளைக் கொண்டு அணு ஆயுதங்களால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அன்று மக்கள் சண்டையிட்டார்கள், இன்று அரசாங்கம் போர் செய்கிறது. அன்று தொட்டு இன்றுவரை ஆதிக்க வெறி இருந்துதான் வருகிறது, அன்றிலிருந்து எதிர்ப்பும் இருந்தே வருகிறது. எதிர்ப்பின் வடிவங்களில் மாற்றம் மட்டுமேயிருக்கிறது, எதிர்ப்பேயில்லாமல் போனதில்லை. ஆதிக்கம் இருக்கும் வரை அதை எதிர்க்கும் கலகக் குரல்களும் இருந்தே தீரும்.
இவையெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களை புரட்டும் போது கிடைக்கும் தகவல். அப்படியொரு வரலாற்று நினைவு கூறலை அல்ஜீரியப் போராட்டம் – The Battle Of Algiers சினிமாவும் கூறுகிறது. வரலாறு கற்றுத்தரும் அத்தனை பாடங்களையும் இந்த சினிமா பதிவு செய்துவிடவில்லை. ஆனால், அல்ஜீரியப் போராட்டத்தின் படிப்பினைகளை இந்த சினிமா படம்பிடித்திருக்கிறது.
பிரான்ஸின் ஆதிக்கத்திலிருக்கிறது அல்ஜீரியா, அடக்குமுறையிலிருந்து தேசத்தை மீட்க FLNஎன்னும் ஆயுதமேந்திய விடுதலைப் போராளிக்குழு இருக்கிறது, இக்குழு தனிநபர் பழிவாங்கலில் இருந்து தாக்குதலைத் துவங்கும் விதமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரிகளைக் கொல்கிறார்கள், பதிலுக்கு ராணுவ அதிகாரியொருவன் அல்ஜீரியர்களின் குடியிருப்பில் வெடிகுண்டை வைக்கிறான், மீண்டும் பழிவாங்கல், பாதுகாப்பு பலப்படுத்தல், பெண்கள் ஆயுதங்களைத் தூக்கிவர மீண்டும் பழிவாங்கல், இந்த பழிவாங்கல் கூட ஒரு விடுதலைப் போராட்டமாகவே வடிவம் பெற, மீண்டும் பலத்த பாதுகாப்பு, பிரெஞ்சுப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு பிரெஞ்சு மக்கள் புழங்குமிடங்களில் வெடிகுண்டு வைக்கிறார்கள், நிலைமை தலை விரித்தாட, ஒரு கொடக்கண்டன் ராணுவ தளபதியாக வருகிறான், அவனுடைய திட்டமிடல் துவங்குகிறது, மக்களை அமைதியான முறையில் ஒரு வாரம் வேலைநிறுத்தத்திலீடுபட FLN குழு அறிவிக்க, மக்களும் சொல்பேச்சு கேட்கிறார்கள், ஆதிக்கவெறி தலைக்கேறி, வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் ஆட்களையும் துப்பாக்கி முனையில் இழுத்து வந்து, ஒரு வார காலம் போராடி, வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வேளையில், FLN குழுவினர் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, நான்கு பேர் மட்டுமே தப்பிக்கிறார்கள், அவர்களும் படிப்படியாக ஒவ்வொருவராக மாட்டுகிறார்கள், இரண்டு வருடங்கள் காயடிக்கப்பட்ட மக்கள், திடீரென பொங்கியெழுகிறார்கள், ராணுவ ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள், அவர்களின் போராட்டம் சில ஆண்டுகள் நீடிக்க, ஆதிக்கம் அகல்கிறது, சுதந்திரம் பிறக்கிறது. (சுதந்திரமடைவது படத்தில் காட்டப்படுவதில்லை, சொல்லப்படுகிறது)
முற்றுப்புள்ளியில்லாமல், மூச்சுவிடாமல் ஒரு பத்தியிலடங்கிவிடக்கூடிய கதைதான், (மேலே சொன்னதைப் போல) ஆனால், உண்மை வரலாற்றைப் பதிவு செய்த விதத்தில், இந்த சினிமா சொல்லும் பாடம் மகத்தானது. இந்த சினிமா முழு போராட்ட வரலாற்றையும் பதிவு செய்யவில்லை, போராட்டத்தின், போரின் நிகழ்வுகளை மட்டுமெ சொல்கிறது.
ஒரு போராட்ட வடிவம் அடக்கப்படும் போது, போராட்ட வடிவங்கள் மாறுமென்பதைப் போல், அல்ஜீரிய மக்கள் முதலில் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட, அடக்குமுறைகள் அதிகமானதால், போராட்ட வடிவம் ஆயுதந்தாங்கியதாக மாறியது, அமைப்பு அழிக்கப்பட்டதும் (படத்தில்) மீண்டும் மக்களே தங்கள் கைகளில் போராட்டங்களை எடுத்துக் கொண்டனர். கல்லெறியும் போராட்டமாகவும், ஓலமெழுப்பும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது. உலகமுழுவதும் அல்ஜீரியப் போராட்டத்துக்காகக் கலகக் குரல்கள் பலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஆல்பெர்ட் காம்யூ, ழான் பால் சர்த்தாரினுடைய குரல்கள் முக்கியமானவை. (காம்யூவை அல்ஜீரிய போராளிகள் அவருடைய சில கருத்துக்களால் எதிர்த்தனர்)
இந்த சினிமா பல வகையிலும் நம் கண் முன்னே ஈழப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. அடக்குமுறை ஏவப்படும் போது, ஆண், பெண், சிறுவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஏவப்படும் போது, எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லோருமே ஆயுதமேந்ததான் செய்வார்கள். அடக்குமுறை எதன் பெயரால் வந்தாலும் சரி, அது நிறத்தாலோ, மதத்தாலோ, கடவுளின் பெயராலோ, ஒடுக்கப்படுபவர்கள் கட்டாயம் எதிர்ப்பார்கள். தங்களிடம் கிடைக்கக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு வருவார்கள், அது கல்லாகவும் இருக்கலாம், கழுதை சாணியாகவும் இருக்கலாம், அல்லது குலவையிடும் வாயாகவும் இருக்கலாம். ஓலமிட மட்டுமில்ல எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தங்கள் குரலைப் பயண்படுத்துவார்கள் என்பதை இப்படத்தின் இறுதியில் காணலாம்.
கருவிலிருக்கும் குழந்தையின் மீது கூட அடிமை முத்திரை குத்தப்படும் போது வாய் திறக்காத புணிதப் பசு மௌனிகள், ஒரு சிறுவன் ஆயுதமேந்தி போராடும் போது, இவங்கள பாத்தீங்களா, சின்ன சின்னப் பசங்க கையில் ஆயுதத்தைக் கொடுத்து போராடச்சொல்றாங்க, இவா எல்லாம் போராளிகளான்னு வாய்கிழிய கத்த வந்துடுவாங்க. அப்படி ஒரு காட்சியாக, வேலை நிறுத்தத்தை ஒடுக்க ராணுவம் வீடுகளுக்குள் புகுந்து ஆட்களை இழுத்து வரும்போது, ஒரு பிஞ்சுக்குழந்தை மலங்க மலங்க விழிக்கும், ஆதரவற்று நிற்கும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ராணுவ அதிகாரி ஒருவர், மக்களே பயப்படாதிர்கள், அந்த தீவிரவாத குழுவிடமிருந்து உங்களைக் காக்கவே பரம்பிதா உருவத்தில் நாங்கள் வந்திருக்கிறோம், புத்தம் சரணம் கச்சாமி, யுத்தம் சரணம் கச்சாமி, ரத்தம் சரணம் கச்சாமி… என்று மைக்கில் ஓலமிட்டு கொண்டிருக்க, ஒரு சிறுவன் அவர்களுக்குத் தெரியாமல், அந்த மைக்கை எடுத்துச் சென்று இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறான், இயக்கத்தின் காய் நகர்த்தல்களில் அவனுடைய பங்கும் இருக்கிறது. படத்தின் இறுதி வரையிலும், அந்த சிறுவன் வந்து கொண்டிருப்பான்.
இயக்கம் அழிந்த பிறகும் தன்னெழுச்சியாக மக்கள் சில காலத்திற்குப் பிறகு கொதித்தெழும் போது, பிரெஞ்சு ராணுவம் தன் ஆதிக்கத்துக்கு சாவு மணியடித்துக் கொண்டு கிளம்பும். நம்பிக்கை கிளை துளிர்க்கிறது.
தான் தோற்ற போர்களிலெல்லாம், வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ளும், அமெரிக்க ஹாலிவுட் சினிமாக்களுக்கு மத்தியில், மக்கள் போராட்டத்தை காட்டும் இத்தகைய சினிமாக்கள் பாராட்டப் பட வேண்டியவை.</div>



அல்ஜீரியாதிரைப்படம்பிரான்ஸ்விடுதலைப் போராட்டம் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License