• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

வால்காவிலிருந்து கங்கை வரை

02 Jul 2010

Reading time ~3 minutes

வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் பற்றிய இக்கட்டுரை, செம்மொழிமாநாடு-விக்கிபீடியா கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரை விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இங்கு வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் (கதைச்) சுருக்கம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால், 20 பகுதிகளாக எழுத வேண்டும்.

வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல சாங்கிருத்யாயன் அவர்களால் 1944ல் எழுதப்பட்டது. இந்நூலை 1949ல் திரு கண.முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே மலர்ந்தது. இந்நூலின் மூலம் இந்தியில் ராகுல்ஜியால் எழுதப்பட்டது. வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சைன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் ஒரு சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது எனலாம்.

 

புத்தகச் சுருக்கம்:

வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி. கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி1942ல் முடிகிறது. இந்தோ–அய்ரோப்பிய இனக்குழு(ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும் முகலாய ஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தில் கதைகளாக வடித்திருக்கிறார்.

நிஷா, திவா மற்றும் அமிர்தாஸ்வான்:

இந்த முதல் மூன்று கதைகளிலும் வால்கா நதிக்கரையிலிருந்து மத்திய ஆசியா வரை படிப்படியாக வந்த இனக்குழுவின் கதைகளை காணலாம். இந்த படிநிலையில், முதல்கதையில் தாய்வழிச்சமூகமாக இருந்த குழுவின் தலைமைப் பதவிக்கான போட்டியோடு முடிகிறது , இந்தக்கதையில் சமூகம் முழுக்கவே ஒரே குடும்பமாக, சொத்துடமை இல்லாத புராதணபொதுவுடைமை சமூகமாக இருக்கிறது. இரண்டாம் கதையில் ஒரே குடும்பமாய் இருந்த சமூகம் ஒரே குழுவாக மாறுகிறது, தாய் தலைமை பதவியை வகித்தாலும், அவள் அந்தப் பஞ்சாயத்தின் தலைவியாகவே இருக்கிறாள். மூன்றாவது கதையிலேயே பெண்ணின் தலைமை பிடுங்கப்பட்டு தந்தை வழிச் சமூகமாக மாறிவிடுகிறது, பெண்ணின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவளும் ஒரு பண்டமாகவே கருதப்படுகிறாள், ஆனாலும் ராகுல்ஜி பெண்ணின் வீரத்தை மதுரா என்ற பாத்திரத்தில் பறைசாற்றுகிறார்.

புருகூதன், புருதானன் மற்றும் அங்கிரா:

இந்த மூன்று கதைகளில் புருகூதன் கதையில் செம்பும், வெண்கலமும் புழக்கத்திற்கு வருவதையும், கற்கால கருவிகள் காலாவதியாகி புதுயுகத்திற்குள் புகுகிறார்கள். அதேபோல தங்கமும் ஆபரணமாக உருப்பெறுகிறது. மக்களைக் காத்து போரில் வழிநடத்தி எதிரிகளை வெல்லும் தலைவன் இந்திரன் எனப்படுகிறான், இந்த இந்திரனே அடுத்த கதையில் தேவர் குலத் தலைவனான இந்திரனாக மாற்றம் பெற்று வேதங்களால் புகழப்படுகிறான். புருதானன் மற்றும் அங்கிரா கதைகளில் சிந்து சமவெளி நகர மக்களுடன் ஆரியர்களுக்கு ஏற்பட்ட போரும் அந்த நகரங்கள் அழிக்கப்பட்ட வரலாறும் கூறப்படுகிறது.

சுதாஸ், பிரவாஹன் மற்றும் பந்துலமல்லன்:

மக்கள் சமூகமாய் இருந்த இனக்குழு அரசபதவியை உருவாக்கியபோது, அரசபதவியை சுரண்டலுக்கான கருவியாகப் பயண்படுத்தி பிரிவினையை உருவாக்கும் வேலையை விஸ்வாமித்திர, வசிஷ்டர், பரத்வாஜர் போன்றவர்களை வைத்து புரோகிதர்கள் செயல்பட்டதை சுதாஸ் கதையிலும், ப்ரம்மசூத்திரம் உருவாக்கி முற்பிறவி, கரும காரியங்களை பயன்படுத்தி மீண்டும் மக்களை அடிமைப் படுத்தும் வேலையை பிரவாஹன் செய்ததையும் அதை யக்ஜவல்கியன் மேற்கொண்டு முன்னெடுத்து செலுத்தியதையும் பிரவாஹன் கதையிலும் சாட்டையடியாய் விளாசுகிறார் ராகுல்ஜி. பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம் நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததும் கூறப்படுகிறது.

நாகதத்தன், பிரபா, சுபர்ணயௌதேயன் மற்றும் துர்முகன்:

இந் நான்கு கதைகளிலும் மக்களின் பஞ்சாயத்து முற்றிலும் முழுதாக ஒழிக்கப்பட்டு சர்வாதிகாரமும் கொண்ட சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப்பட்ட காலகட்டம் பின்னணியாக வைக்கப்பட்டு குப்தர்களின் அரசாட்சி முறை விமர்சணத்துக்கு உள்ளாக்கப்படுகிறது, அதே சூழலில் பௌத்த தத்துவமும், பௌத்த ஜனசங்க ஆட்சிமுறையும், அஸ்வகோஷ் போன்றவர்கள் வாயிலாகவும் விளக்கப்படுகிறது. இந்திய கலை உலகத்துக்கு அஷ்வகோஷால் நாடகக் கலை, வடிவம் பெற்றதையும், காளிதாசர், பானபட்டர் போன்ற படைப்பாளிகளும் தங்கள் படைப்புத்திறனை அரச துதி பாடுவதற்கு பயண்படுத்தியதையும் ராகுல்ஜி ஒரு பாத்திரமாக மாறி சாடுகிறார்.

சக்கரபாணி, பாபா நூர்தீன் மற்றும் சுரையா:

இம்மூன்று கதைகளிலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வருகையையும், கொள்ளையையும் மற்றும் அவர்களது அரசாட்சியையும் அவர்களை ஒட்டுமொத்தமாய் எதிர்க்காத இந்திய அரசர்களையும் ராஜ புத்திரர்களின் வீரத்தையும், இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி முறையையும் கூறுகிறார். அக்பர்–பீர்பால் பற்றிய கதைகளை அக்பரும் பீர்பாலும் தோடர்மாலும் பேசிக்கொள்வதாகவும் அவர்களுடைய பேச்சு மதங்களை தாண்டிய மணிதத்தைப் பற்றியதாகவும் அதை நோக்கிய பயணத்தைப் பற்றியும் இருக்கிறது.

ரேக்கா பகத், மங்கள சிங், சபதர் மற்றும் சுமேர்:

இந்நான்கு கதைகளிலும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் கூறப்படுகிறது. ரேக்கா பகத் கதையில் ஜமீன்தாரி முறையின் தோற்றத்தையும், ஆங்கிலேய ஆதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஜமீன்தாரி முறைக்கு எதிராகவும் அதன் தோற்றத்தை அலசி ஆராய்பவர்களில் ஒருவரான, ரேக்காபகத், ஜமீன்தாரி முறையால் என்ன ஆனார் என்பதும், அவர் ஜமீன்தாரி முறைக்கு எதிராக என்ன செய்தார் என்பதும் அடங்குகிறது. மங்களசிங் கதையில், சிப்பாய் கலகம் செய்தவர்கள், கவணிக்கத் தவறிய,செய்யத் தவறிய ஆனால், செய்திருக்க வேண்டிய செயல்களை செய்யும் ஒரு வீரனான மங்கள சிங்கின் கதையைக்கூறி சிப்பாய் கலகத்தையும் அதை முன்நின்று நடத்தியவர்களையும் விமர்சிக்கிறார் ராகுல்ஜி. சபதர் மற்றும் சுமேர் ஆகிய இரன்டு கதைகளும் கி.பி 1922 முதல் இரண்டாம் உலகப்போர் காலம் வரையிலான இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும், மகாத்மா காந்தியின் போராட்டமுறைகளையும் விமர்சிக்கிறார். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இக்கட்டான நிலையையும், பாசிச, நாசிசத்தால் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும், பொதுவுடைமை மட்டுமே இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும் என்பதையும், (எக்காலத்திலும்) நடுநிலை வகிப்பதாய் சொல்பவர்களையும் சாடுகிறார்.

ராகுல்ஜி அவருடைய பயணக்கட்டுரைகளுக்காக புகழ்பெற்றவர், வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தின் இருபது கதைகளிலும் அவரும் ஊர்சுற்றியாகவே அந்தந்த காலத்துக்குச் சென்று பார்த்ததைப் போலவும், கதைகளில் வரும் பாத்திரங்களின் பேச்சும் செய்கையும் இந்தப் பாத்திரங்கள் ராகுல்ஜியாகவோ அல்லது ராகுல்ஜி இந்த பாத்திரமாகவோ, வாழ்ந்திருப்பதை அறிய முடியும். இந்த நடையும், கதை சொல்லும் பாங்குமே இப்புத்தகத்தின் வெற்றி எனலாம்.




நாவல்புத்தகம்மானுடவியல்ராகுல்ஜிவரலாறு Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License