• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

Children Of Heaven

19 Sep 2009

Reading time ~2 minutes

சிறு வயதில் நீங்கள்,பெரியவர்களால் நுழைய முடியாத மறைவான உலகத்தில் தலைமறைவு காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் தங்கையோ,அண்ணனோ செய்த தவறை பெற்றோரிடமிருந்து மறைத்து காப்பாற்றியிருக்கிறீர்களா? Children Of Heaven படத்தைப் பார்த்தால் உங்கள் சிறு வயது நினைவுகள் கிளறப்படுவதை உங்களால் தடுக்க முடியாது.

ஒரு குட்டிச்சிறுமியின், பிய்ந்து போன வெளிர்சிகப்பு நிற ஷூ தைக்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கும் கதை,அந்த சிறுமியின் அண்ணனின் ஷூ பிய்ந்து போவதில் முடிகிறது.ஒரு சிறுமியின் ஷூ காணமல் போனால் ஓர் ஏழ்மை குடும்பத்தின் அண்ணனும் தங்கையும் என்ன செய்வார்கள் என்பதுதான் இந்த படத்தின் ஒருவரிச் சுருக்கம்.

தன் குடும்பத்தின் வறுமைச்சூழலை தெரிந்து வைத்திருக்கும் அண்ணன், தன் தங்கையின் பிய்ந்து போன செருப்பைத் தைக்க எடுத்துச் செல்கிறான், தைத்துக்கொண்டுவரும் வழியில் அந்தச் செருப்பை தொலைத்துவிடுகிறான்.தங்கையிடம் தொலைந்துபோன செருப்பை தான் எப்படியும் கண்டுபிடித்து தருகிறேன், அப்பாவிடம் கூறிவிடாதே என்று கெஞ்சுகிறான்,மறுநாள் எப்படி அவள் பள்ளிக்கு ஷூ இல்லாமல் செல்வது என்று அவர்களுக்குள் நடக்கும் அந்த மூன்று நிமிடக் காட்சி உண்மையிலேயே கவிதை.

அண்ணனின் ஷூவை அவள் பள்ளிக்குப் போட்டுச்சென்று அவள் பள்ளிமுடிந்ததும் அவனிடம் ஷூவைக் கொடுக்க வேண்டும் அவன் அதைப் போட்டுக் கொண்டு அவனது பள்ளிக்கு ஓட வேண்டும், இதுதான் அவர்களது ஒப்பந்தம். முதல் நாள் அவள் பள்ளிமுடிந்ததும் ஓடிவரும் காட்சியில் கேமிராவின் துரத்தல் அப்பட்டமாய் தெரிந்தாலும், அதன் அழகான கட்டமைப்பை பாராட்டியே ஆக வேண்டும். அவள் முதலில் ஓடத்துவங்கும் போது ஆக்டிவ் ஸ்பேஸ் அதிகமாகவும், ஓட ஓட ஆக்டிவ் ஸ்பேஸ் குறைந்து பேஸிவ் ஸ்பேஸ் அதிகமாக துவங்குவது, அவள் போக வேண்டிய தூரத்தையும் அவளது வேகத்தையும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது அந்த பிய்ந்து போன ஷூவை அவள் தேடுவதும் அதைக் கண்ட பிறகு, அவள் அண்ணனோடு ஷூ மீட்பில் இறங்க அந்த ஷூவின் தற்போதைய சொந்தக்காரியைப் பார்த்துவிட்டு மௌனமாக திரும்புகிறார்கள். நகரத்திற்கு சென்று தோட்ட வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்குமென்று நகரத்துக்குத் தந்தை செல்ல அவருக்கு உதவியாக அண்ணனும் கூடச் செல்கிறான்(தங்கைக்கு ஷூ வாங்க).

ஷூமாற்றுக் களேபரத்தில் தினமும் பள்ளிக்குத் தாமதமாகப் பள்ளிக்குச் செல்பவனை ஒரு ஆசிரியர் கண்டித்து வீட்டுக்கு துரத்துகிறார். ஷூவை அண்ணனுக்கு மாற்றிக் கொடுக்க தங்கை ஓடும்போது ஷூ கழற்றிக் கொண்டு கால்வாயில் விழுவதும் அதைத் துரத்திக் கொண்டு அவள் ஓடுவதும் என்று, இருவரும் மாறி மாறி ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.இந்த ஓட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க அண்ணன் ஓடுவதற்கு முடிவெடுக்கிறான்.

பள்ளிகளுக்கு இடையில் நடக்கும் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடம் பெறுபவருக்கு ஷூ பரிசு என அறிவிக்கப்படுகிறது. முதல் இரண்டு இடங்களைப் பற்றி படத்தில் சொல்லப்பட்டாலும் நமக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை என்ற மனநிலைக்கு நாம் வந்து சேர்கிறோம். நமக்கு முன்பாகவே அவனும் அந்த முடிவுக்கு வந்திருக்கிறான். ஓடோடி வந்து தங்கையிடம் மூன்றாம் பரிசைப் பற்றிச் சொல்கிறான். நீ மூன்றாம் இடம் வராவிட்டால் என்ன செய்வது என்று தங்கையின் கேள்விக்கு நிச்சயமாய் நான் மூன்றாவது இடம் வருவேன் என்கிறான். போட்டி துவங்குகிறது ஓடுகிறான் ஓடுகிறான் மூண்றாவது இடத்தை நோக்கி ஓடுகிறான். முதாலாவதாக ஓடி வருகிறான் தனக்கு முன்னால் வேண்டுமென்றே இருவரை முந்த விடுகிறான். எதிர்பாராத விதமாய் மூண்றாம் இடம் போகிறது, மூன்று, நான்கு ஹூம் ஹூஹும் ஓடு!ஓடு!!.இப்போது ஓடாவிட்டால் இருவரும் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.-இந்தக் குரல் சத்தியமாக என் மண்டைக்குள் ஒலித்தது– திடீரென வரும் காட்சிகளில் படத்தின் முடிவு மூன்றாவது இடத்தை நோக்கி என்பது புரிகிறது.

நான் மூன்றாவது இடமா? என்று கேட்டுவிட்டு வெற்றியாளனாகக்கூட அவன் மகிழ்ச்சியடையாமல் தலை கவிழ்ந்து நிற்கும் இடத்தில் மனம் என்னமோ செய்கிறது. அவன் தங்கையிடம் வந்து அவனது பிய்ந்து போன ஷூக்களை கழற்றிப் போடுகிறான், தொட்டியிலிருக்கும் மீன்கள் அவன் கால்களை முத்தமிடுகின்றன.



திரைப்படம் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License